அமெரிக்கன் சிலோன் மிசன் திருச்சபை.

செய்தி மடல்

(நீ பயப்படாதே நான் உன்னுடனே இருக்கிறேன்….உன்னைத் தாங்குவேன். ஏசாயா 41: 10)

அன்பார்ந்த இறைமக்களே, மீண்டும் ஒரு லெந்து காலத்தை கடந்து தூய ஆவியானரின் ஆளுகைக்குள் காலடி எடுத்து வைத்துள்ளோம். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டில்(2021) மிக நெருக்கடியான சவால்களை எதிர்நோக்கியுள்ளோம். அதாவது COVID-19 என்ற பயங்கரமான தொற்று நோயின் அச்சத்தின் மத்தியில் வாழ்ந்து வருகிறோம். 2020ம் ஆண்டு மார்ச் மாதத்தில் உணரப்பட்ட கொரோனா வைரஸ் தாக்கமானது மிகக் குறைந்த அளவாக இருந்த போதும், எமது அன்றாட வாழ்வை முடக்கி நாம் எதிர்பார்த்தபடி பல நிகழ்வுகளை நடாத்த முடியாது போய்விட்டது.

மேலும்; இந் நோய்த் தாக்கம் தீவிரமடைந்து இந்த ஆண்டு எம்மையும், அகில உலக மக்களையும், பொருளாதார, அரசியல் மற்றும் சமூக நிலைகளையும் வளர்ச்சிப்பாதையில் செல்லவிடாது தடை செய்துள்ளது. இவ்வாறான வேளைகளில் எங்களிடையே எழும் வினா எப்போது இந்த நோய் எம்மை விட்டு நீங்கும்? என்பதாகும். இந் நிலைமைகளால் எமக்கும் எம்மைப்போன்ற விசுவாசிகள் அனைவருக்கும் கடவுளின் ஆற்றலைக் குறித்து சந்தேகம் எழும் அளவிற்கு எமது பக்தி வாழ்வு ஆட்டங்கணக்கூடும். ஆயினும் இவ்வாறன தடுமாற்றங்களுக்குப் பெந்தகோஸ்தே என்னும் தூயாவியரின் திருநாள் எமக்கு விடையளிக்கிறது.
கிறிஸ்தவ விசுவாச பயணத்தில் கிறிஸ்மஸ் பண்டிகை முக்கியமானதாக உள்ளதுடன் உயிர்ப்பு(ஈஸ்ரர்) விசுவாசிகளிற்கு அச்சாரமாக இருக்கிறது. பெந்தகோஸ்தே திருநாளானது பலவேளைகளிலும் கிறிஸ்மஸ், ஈஸ்ரர் பண்டிகை போன்று முக்கியமானதாக உணரப்படவில்லை. திருத்தூதுவர் பணிகளிலே வெளிப்பட்ட தூய ஆவியானவர் (அப் 2: 1- 11) ஆதித்திருச்சபை மக்களின் வாழ்வில் பெரும் மாற்றத்தை, அதிர்வை ஏற்படுத்துகிறார். உயிர்த்த ஆண்டவரை முகமுகமாக கண்ட பின்னரும் பயந்து வாழ்ந்த சீடர்களுக்கும் மற்றைய யூதமக்களுக்கும் இறை ஆற்றலை வெளிப்படுத்தி அதன் மூலம் உரோம அரசின் ஆதிக்கத்திற்கு எதிராக துணிந்து சுயாதீனமாக வாழ வழியைத் திறக்கிறார்.

  • கலிலேயா மக்களிடத்திலும் கடவுளின் ஆற்றல் வெளிப்படுமா? என்ற ஏளனப் பேச்சுக்களைக் கேட்டு நொந்துபோன மக்களின் வாழ்வில், சொந்த தாய்மொழியைப் பேசும் உரிமையை, சுயாதீனத்தை, விடுதலையைக் கொடுத்து புதிய சமுதாயத்திற்கு வித்திட்டார்.
    தூய ஆவியானவர் தமது அருளினால் எம்மை வழிநடத்துபவர் மட்டுமல்ல எமக்காக போராடும் ஆண்டவராக, ஏன் எமக்காக எங்கள் சார்பில் ஜெபிக்கின்ற ஆண்டவராக கூட இருக்கிறார். (ரோமர்8: 26)
  • தூய ஆவியானவர்; தமது ஆற்றலினால் எமது வாழ்வை வலுவூட்டுபவராக,(Empower) வளப்படுத்துகின்றவராக இருக்கிறார். .சீடர்களை என் பின்னே வாருங்கள்……. மனுசரைப் பிடிக்கிறவர்களாக்குவேன் (மாற்கு 1: 17) என அழைக்கின்றவர், முகவரி குறிப்பிட முடியாத மக்களை (அப் 3: 1-12), குறிப்பாக பெண்களை, (மாற்கு 14: 1-11) வலுவூட்டி வல்லமையோடு வாழ வழிகாட்டியுள்ளார்.
  • தூய ஆவியர் எமக்குள்ளே செயலாற்றி, எமது வாழ்விற்கான புதிய அர்த்தத்தை, ஆதாரத்தைத் தருகிறார். தீய சக்திகளோடு துணைபோகின்ற வாழ்வை விரும்பாது மாற்றத்திற்கு உட்பட்ட புது வாழ்வை, மகிமை நிறைந்த வாழ்வைத்தான் ஆவியானவர் விரும்புகிறார். வாழும் கிறிஸ்துவைப் பிரதிபலிக்கின்ற வாழ்வு இலகுவானது அல்ல. ஓடுகின்ற நீரோட்டத்துடன் ஓடி எமது வாழ்வை முடித்துக்கொள்ளாது, எதிர்நீச்சல் போடவும், தீமைகளை எதிர்த்து நிற்கவும், நன்மையை நாடவும், மற்றவர்களை உற்சாகப்படுத்தி அர்த்;தமுள்ள புனித வாழ்விற்குள் அழைத்துச் செல்லவும் நாம்; எதிர்பார்க்கப்படுகிறோம். “என் ஆடுகளை மேய்ப்பாயாக” (யோவான் 21:16) Tender my sheep என்ற அறைகூவல் எமது காதுகளில் கேட்கின்றதா?????

எனவே தூய ஆவியரின் தினம் என்பது ஒரு நாள் நிகழ்வல்ல பண்டிகை அல்ல, விழா அல்ல, மாறாக அது தொடர்ச்சியாக வாழ்வில் ஏற்படும் மாற்றமாகும் (ரோமர் 12: 1, 2). எனவே எமது வாழ்க்கை முறைமையை (Life style) மாற்றியமைத்து ஆண்டவர் எதிர்பார்த்த பரிசுத்த வாழ்வை எமதாக்க வேண்டும்.

வாழ்க்கை முறைமை மாற்றம் என்பது தற்போதைய பெருந்தொற்றுக் காலப்பகுதியில் நாம் பொறுப்போடு வாழ வலியுறுத்துகிறது. குறிப்பாக அரசின் சுகாதார அறிவுறுத்தல்களைக் கடைப்பிடித்து அயலானையும் பொறுப்போடு பராமரித்து வாழவும் கற்றுக்கொள்ள வேண்டும். இந்த பொறுப்பான செயலினால் நாம் நோயிலிருந்து காப்பாற்றப்படுவது மாத்திரமல்ல மற்றவர்களையும் அழிவிலிருந்து காப்பாற்றுவோம். இதுவும் தூய ஆவியானவரின் செயல்பாடாகும்.

அன்பார்ந்த திருச்சபை மக்களே! இக்காலகட்டத்தில் திருச்சபை மக்களாகிய உங்களையும் பொறுப்புடன் வாழவும்;. திருப்பணிகளிலே, விசுவாச பயணத்தில் நீங்களும் உற்சாகமாக பங்குபெறவும் அன்புடன் அழைக்கின்றேன்.

திருச்சபையைச் சார்ந்த குடும்பங்களிலும் மற்றைய நண்பர்கள் மீதும் அக்கறை காட்டி, அவர்களை தொலைபேசியிலோ அல்லது மற்றைய சமூக வலைத்தளங்கள் ஊடாகவோ கரிசனையோடு விசாரித்து, உடனிருக்கின்ற அனுபவத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் விசுவாச வாழ்வை மேம்படுத்துவதற்காக, WhatsApp,  Viber போன்ற சமூக வலைத்தளங்கூடாக பகிரப்படுகின்ற பாடல்கள், திருமறை படிப்புக்கள், நற்சிந்தனைகள், ஜெபங்கள் போன்றவற்றின் இணைப்புக்களை (link) மற்றைய நண்பர்களுக்கும் பகிருங்கள். உங்களிடம் மீதியாக இருக்கும் நேரத்தைத் தூய ஆவியானவருக்கென்று கொடுத்து ஆண்டவரின் பிரசன்னத்தை உணர்ந்து கொள்ளுங்கள். எம்மையே ஆண்டவரின் காணிக்கையாக மாற்றுவோம்.
இந்த சவாலான சூழலிலும் ஆண்டவரின் இன்ப சமூகம் உங்களுடன் என்றும் நிலையாகத் தங்கியிருப்பதாக.

அருள்திரு.T. தேவநேசன்.
தலைவர். CACM